Published : 18 Dec 2020 10:53 AM
Last Updated : 18 Dec 2020 10:53 AM

தமிழகம் பாஜகவின் எதிர்ப்பு பூமியாக இருப்பதால் 7 கோடி மக்களையும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

தமிழகம் பாஜகவின் எதிர்ப்பு பூமியாக இருப்பதால் 7 கோடி மக்களையும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச. 18) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் சமீபத்தில் வீசிய நிவர் புயலாலும், புரெவி புயலாலும் 41 ஆயிரத்து 262 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கமும் குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட இடங்களை 2 குழுக்களாகப் பிரிந்து சென்று பார்வையிட்டு தமிழக அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 3,758 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது. மாநில பேரிடர் மீட்பு நிதி 75:25 விகிதத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிதியில் தற்போது ரூபாய் 538 கோடி பற்றாக்குறை நிலையில் உள்ளது. அரசு கஜானாவிலும் பணம் இல்லை. பேரிடர் மீட்பு நிதியிலும் பணம் இல்லை.

ஆனால், இயற்கை சீற்றத்தினாலும், வறட்சியினாலும் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் மத்திய பாஜக அரசிடம் தமிழக அரசு நிதி கேட்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆனால், மாநில அரசு கேட்ட தொகைக்கும், மத்திய அரசு வழங்கிய நிதியையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் தான் தெரிகிறது.

2011-12 ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தானே புயல் சேதத்திற்காக பிரதமர் மோடியிடம் கேட்டது ரூ.5,249 கோடி. ஆனால், மத்திய அரசு வழங்கியதோ ரூ.500 கோடி. டிசம்பர், 2015 சென்னை வெள்ளப்பெருக்கின் போது கேட்ட தொகை ரூ.25 ஆயிரத்து 912 கோடி. ஆனால், கொடுத்ததோ ரூ.1,940 கோடி. 2016-17 இல் வர்தா புயல் சேதத்திற்குத் தமிழக அரசு கேட்டது ரூ.22 ஆயிரத்து 573 கோடி. ஆனால் மத்திய அரசு வழங்கியதோ ரூ.266 கோடி. 2017 வறட்சியின் போது கேட்ட தொகை ரூ.39 ஆயிரத்து 565 கோடி. ஆனால், கொடுத்ததோ ரூ.1,793 கோடி. 2017-18 இல் ஒகி புயல் சேதத்திற்குக் கேட்டது ரூ.9,302 கோடி. மத்திய அரசு வழங்கியதோ ரூ.133 கோடி. 2018-19 இல் கஜா புயல் சேதத்திற்கு தமிழக அரசு கேட்டது ரூ.17 ஆயிரத்து 899 கோடி. மத்திய அரசு வழங்கியதோ ரூ.1,146 கோடி. கடந்த காலங்களில் தமிழக அரசு மத்திய பாஜக அரசிடம் கேட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பாஜக அரசு 6 கட்டங்களாக வழங்கியதோ ரூ.5,778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதுதான் பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி. தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையையும், மத்திய அரசு வழங்கிய தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏணி வைத்தால் கூட எட்டாது. பாஜக அரசின் அலட்சியப் போக்குக்கு என்ன காரணம்? தமிழக அரசைத் துச்சமென மதிப்பது ஏன்? தமிழக மக்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்?

தமிழகம் பாஜகவின் எதிர்ப்பு பூமியாக இருப்பதால் 7 கோடி மக்களையும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டினார்கள். பாஜக அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த துணிவற்ற அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு திகழ்ந்து வருகிறது.

தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் விசாரணை வளையங்களில் சிக்கி மடியில் கனத்துடன் இருப்பதால் மோடி அரசைத் தட்டிக் கேட்கிற துணிவை எடப்பாடி பழனிசாமி அரசிடம் எதிர்பார்க்க முடியாது.

எனவே, மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கிலிருந்து மக்களைப் பாதுகாக்க, தமிழகத்தில் ஆளும் துணிவற்ற அரசிடம் இருந்து மக்களை மீட்க வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் உரிய வாய்ப்பாக அமையப் போகிறது.

அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குகிற வகையில் பாஜக அரசின் வஞ்சக அரசியலைத் தமிழக மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதே திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x