Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

சென்னை ஐஐடியில் கரோனா பரவியதைத் தொடர்ந்து கல்லூரிகள், விடுதிகளில் 6 ஆயிரம் பேருக்கு சோதனை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை ஐஐடி வளாகத்தில் விடுதியில் தங்கிய மாணவர்கள் மற்றும்பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் 6,344 பேருக்கு மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளை டிச.7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர்.

இதனிடையே சென்னை ஐஐடிவளாக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களுக்கான உணவக பணியாளர்களிடம் சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 180 பேருக்குமேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் கிண்டியில் உள்ள கிங்ஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் பலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி முழுவதும் உள்ள கல்லூரிகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

210 பேருக்கு தொற்று உறுதி

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “மாநகராட்சி பகுதிகளில் இயங்கும் கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் உள்ளிட்டவற்றில் இதுவரை 6,344 பேரிடம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16-ம் தேதி நிலவரப்படி 210பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,773 பேருக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ளது. மேலும் 2,361பேருக்கான பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

தற்போது கல்லூரிகளில் 210 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னைஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை அமைந்துள்ள அடையாறு மண்டலத்தில் மட்டும் 200பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் 5 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 3 பேருக்கும், ஆலந்தூர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர10 மண்டலங்களில் உள்ள கல்லூரிகளில் இதுவரை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x