

தமிழகத்தில் வெளி மார்க்கெட்டில், சிமென்ட் விலை அதிகரித்ததால், ஏழை மக்கள் வீடு கட்ட சிரமப்பட்டனர். எனவே, மலிவு விலையில் சிமென்ட் விற்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, 2015-ல் ‘அம்மா சிமென்ட்' என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனை திட்டம் தொடங்கப்பட்டது.
நுகர்பொருள் வாணிபக் கழகம்மூலம் 50 கிலோ அம்மா சிமென்ட் மூட்டை ரூ.190-க்குவழங்கப்படுகிறது. வீடு பராமரிப்புக்கும், புதிய வீடு கட்டுவதற்கும் வரைபட அனுமதி பெற்று சிமென்ட் மூட்டை வழங்கப்படுகிறது. வங்கியில் ‘டிடி' எடுத்து பதிவு செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் சிமென்ட் விநியோகம் செய்யப்படும்.
அரசு திட்டங்களில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சிமென்ட் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பசுமை வீடு கட்டும் திட்டத்தில் 115 மூட்டைகள்; பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 104 மூட்டைகள் அம்மா சிமென்ட் வழங்கப்படுகிறது. இந்த சிமென்ட்டை நம்பியே வீடுகட்டும் திட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலர் கட்டுமான பணியை தொடங்கினர்.
இந்நிலையில் காஞ்சி, செங்கைமாவட்டங்களில் சிமென்ட் இருப்புஇல்லை என்பதால் திட்ட பயனாளிகள், அதிக விலை கொடுத்து வெளி மார்க்கெட்டில் சிமென்ட் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால், கட்டுமான செலவு அதிகரித்து அவதிக்குள்ளாகின்றனர்.
ஏப்ரல் முதல் இதுவரை சிமென்ட் கோரி பதிவு செய்தவர்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை.
எனவே, அம்மா சிமென்ட் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, அம்மா சிமென்ட் மூட்டை விலையை அரசு ரூ.190-லிருந்து ரூ.216 ஆக உயர்த்தியுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, "தற்போது, சிமென்ட் உற்பத்தியாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்துவிடும். அதன் பின் சிமென்ட் வந்ததும் திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்" என்றனர்.
ஏப்ரல் முதல் இதுவரை சிமென்ட் கோரி பதிவு செய்தவர்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை.