சென்னையில் இருந்து மலேசியாவுக்கு அனுப்புவதாக கூறி 50 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தப்ப முயன்ற 2 பேர் கைது; 3 பேருக்கு வலை

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு அனுப்புவதாக கூறி 50 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தப்ப முயன்ற 2 பேர் கைது; 3 பேருக்கு வலை
Updated on
1 min read

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒடிசாவை சேர்ந்த 50 பேரை சென்னைக்கு வரவழைத்து, தலா ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தப்பிய 3 பேரை தேடி வருகின்றனர்.

ஒடிசாவை சேர்ந்தவர் ராஜு. இவர் அதே மாநிலத்தை சேர்ந்தசுமார் 50 பேருக்கு மலேசியாவில் கட்டிட வேலை வாங்கித் தருவதாகக் கூறி , அவர்களை விசாகப்பட்டினத்துக்கு வரவழைத்துள்ளார். முன்பணமாக அவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் பெற்ற அவர், மீதி பணம் ரூ.40 ஆயிரத்தை விசா கிடைத்த பிறகு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், விசா தயாராகிவிட்டதாக கூறி 50 பேரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வரவழைத்து, சென்ட்ரல் அருகே உள்ள ஓட்டலில் தங்கவைத்தார். பின்னர், ஒடிசாவை சேர்ந்த சுப்ராத் குமார் போலோ என்பவர் உட்பட 5 பேர் அங்கு வந்து, 50 பேரிடமும் தலா ரூ.40 ஆயிரம் வாங்கிக்கொண்டு, விசாவை கொடுத்துள்ளனர். காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் தயாராக இருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

போலி விசா

இந்நிலையில், ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு சென்று வந்த ராஜேஷ்குமார் என்பவர், அந்த விசாவில் உள்ள பார்கோடை அருகே இருந்த இணைய மையத்தில் பரிசோதித்துப் பார்த்தபோதுஅது போலி விசா என தெரியவந்துள்ளது. சுப்ராத் குமாரை தொடர்பு கொண்டபோது, அவரதுசெல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, 50 பேரும் 5 குழுக்களாக பிரிந்து தி.நகர், கோயம்பேடு பேருந்து நிலையங்கள், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், விமான நிலையத்தில் தீவிரமாக தேடியுள்ளனர்.

அப்போது, சுப்ராத் குமார்உள்ளிட்ட 5 பேரும் பெங்களூருவுக்கு தப்பிச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது, 3 பேர் தப்பி ஓடிவிட்ட நிலையில், ராஜேஷ்குமார் பாண்டா, தினேஷ் பட்ரா ஆகிய 2 பேர் பிடிபட்டனர். அவர்கள் இருவரையும் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். தப்பிய 3 பேரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in