

புழுதிவாக்கம் சித்தேரியில் உள்ள செடி, கொடி, கழிவுகளை அகற்ற அதிமுக, திமுகவினர் போட்டி போட்டு களம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தை சேர்ந்தபுழுதிவாக்கத்தில் சித்தேரி உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 24 ஏக்கர்பரப்பளவு கொண்டது. அண்மையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.2.46 கோடி செலவில் இந்த ஏரி சீரமைக்கப்பட்டு, கரையை பலப்படுத்தி, நடைபாதை அமைக்கப்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால் ஏரி நிரம்பியது. ஏரியில் அதிக அளவில் செடி, கொடிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் காணப்பட்டன. குடியிருப்போர் சங்கம் சார்பில் ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிமுக, திமுகவினர் படகுகளுடன் அங்கு குழுமினர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் படகுகளை இறக்க எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கலவரம் ஏற்படாமல் இருக்க போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அப்போது, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர்அங்கு வந்தனர். ஏரியை சுற்றிப்பார்த்த அவர்கள், மாநகராட்சி அதிகாரியுடன் பேச்சு வார்த்தைநடத்தினர்.
பின்னர், அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் ‘மாநகராட்சியே ஏரியை தொடர்ந்து முழுமையாக சுத்தப்படுத்தும்' என இரு தரப்பினரிடமும் உறுதி அளித்தனர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், "புழுதிவாக்கம் சித்தேரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்; மழைநீரை மட்டுமே ஏரியில் விட வேண்டும்" என நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.