

பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லை மிகப் பரந்த அளவில் உள்ளது. இதற்கு உட்பட்ட பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் மாநகர பேருந்து பணிமனை, பெரும்பாக்கம் துணை மின் நிலையம், சித்தாலப்பாக்கம் துணை மின் நிலையம் என அரசு அலுவலகங்கள், அரசினர் கலைக் கல்லூரி, ஐடிஐ, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும்தனியார் நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன.
எனவே, பெரும்பாக்கம் காவல் நிலையத்தை புதிதாக தொடங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரும்பாக்கம், எழில்நகர், 8 அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள S-16 பெரும்பாக்கம் காவல் நிலையத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார்அகர்வால் நேற்று திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து காவல் நிலைய வளாகத்தில் அவர் மரக்கன்றையும் நட்டார்.
பின்னர் இப்புதிய காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சித்குமாரின் செல்போன் எண்களான9840619597, 9498143067 ஆகியவற்றை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன், தெற்கு மண்டல இணை ஆணையர் ஏ.ஜி.பாபு, புனித தோமையர் மலை துணை ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.