

தற்போது தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளில் 40 சதவீத குழந்தைகள் சராசரி எடையை விடகுறைந்த எடையுடன் பிறக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர்சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 5 வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகளில் 55 சதவீதம் பேர்ரத்தசோகையினாலும், 30 சதவீதம்பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 23.3 சதவீதம் பேர் எடை குறைபாடு உள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவற்றைக் களையும் விதமாகதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் திருவூர் வேளாண் அறிவியல் நிலையம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து, கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்க ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், திருவூர் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் ‘முழுமையான ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி திருவள்ளூர் மாவட்டம்’ என்ற தலைப்பில் ஊட்டச்சத்து தோட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சம்பத் குமார், வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில், உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானிடாக்டர் சவுமியா சுவாமிநாதன்பேசியதாவது: தற்போது தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளில் 40 சதவீத குழந்தைகள் சராசரிஎடையைவிட குறைந்த எடையுடன் பிறக்கின்றனர். பிறக்கும்போது குழந்தைகள் குறைந்தபட்சம் 2.5 கிலோ எடையுடன் இருந்தால்தான் மூளை வளர்ச்சி இருக்கும். ஆகவே, கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம்.
மேலும், தமிழகத்தில் தற்போது 5-ல் ஒருவர் நீரிழிவு நோயாலும், 4-ல் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உடலுழைப்பு குறைந்ததுதான். எனவே, உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் தேவையாக உள்ளது என்றார்.