

கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் மழை ஓய்ந்திருந்த நிலையில் 15-ம்தேதி இரவு மீண்டும் மழை தொடங்கியது. தொடர்ந்து இரு நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டியது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 15 செ.மீ மழை பதிவானது. இதனால் ரெயின்போ நகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல இடங்களில் தேங்கிய தண்ணீரை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மின்மோட்டார்கள் மூலம் வெளி யேற்றினர்.
இதேபோல் பாகூர், வில்லி யனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மீண்டும் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. கடலூர் - புதுச்சேரி மெயின்ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தன்பேட் புதுநகர், கன்னியகோயில் ரத்னா நகர், கிருமாம்பாக்கம் பேட், வில்லியனூர் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகள் என 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் தங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கின.
தொடர் மழையால் ஊசுட்டேரிநிரம்பியதையடுத்து பத்துக்கண்ணு பாலம் வழியாக உபரிநீர் திறந்துவிடப்பட்டது. கனமழையால் புதுச்சேரியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நேற்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.