Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை - பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் சாலாமேடு ஏரி முழுமையாக நிரம்பி கரை உடைந்தது. இதனால் அபிதா கார்டன், சிங்கப்பூர் நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார்300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

விழுப்புரம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காணை - கெடாருக்கு இடையே அகரம்சித் தாமூரில் உள்ள தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது. அகரம்சித்தாமூர், வாழப்பட்டு, கெடார், செல்லங்குப்பம், சூரப்பட்டு உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இக்கிராம மக்கள், திருவண்ணாமலை சாலை சென்று சுமார் 12 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் வந்து செல்கின்றனர்.

இதேபோல் பம்பை ஆற்று வெள்ளத்தினால் பள்ளியந்தூரில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொன்னங்குப்பம், அரியலூர்திருக்கை, காங்கேயனூர் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு போக் குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மல்லிகைப்பட்டில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் கோழிப்பட்டு, மாம்பழப்பட்டு உள்ளிட்ட 5 கிராமங்களுக்கும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்திருக்கையில் இருந்து பனமலைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அனுமந்தபுரம், அத்தியூர்திருக்கை, போரூர்,அடங்குணம், கொசப்பாளையம், திருக்குணம் உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட கிராமங்களுக்கு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பிரம்மதேசம் அருகே உள்ள வன்னிப்பேர், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குன்னத்தூர், கொங்கராயனூர், கஞ்சனூர் அருகே முட்டத்தூர், அரகண்ட நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித் தபடியும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலச்சேரி அருகில் உள்ள வராகநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு கிறது.அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடியும் தண்ணீர் செல்கிறது. இருப்பினும் குறைந்த அளவு தண்ணீர் ஓடுவதால் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்று வருகின்றன.

இதேபோல், கண்டாச்சிபுரம் அருகே கடையம், விக்கிரவாண்டி அருகே புதுப்பாளையம் உட்பட சில கிராமங்களில் ஏரிகள் உடைந்துஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், வீடுகளில் தண்ணீர்சூழ்ந்து கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடூர் அணை முழு கொள்ளவைஎட்டி, உபரிநீர் திறந்துவிடப்பட் டுள்ளது. நேற்று விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையினால், ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி மழையளவு (மில்லி மீட்டரில்): விழுப்புரம்-84,கோலியனூர்-79, கெடார்-156 வானூர்- 69, திண்டிவனம்-71,செஞ்சி- 48, வல்லம்- 50, அனந்தபுரம்-164.30,மணம்பூண்டி-174,திருவெண்ணெய்நல்லூர்-40,வளத்தி-45, மொத்த மழை அளவு1,802 மி.மீ, சராசரி மழையளவு 85.82 மி.மீ பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x