

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏனாமில் போட்டியிடவில்லை. தேவைப்பட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெகனுடன் இணைந்து செயல்பட இருக்கிறேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் ஆந்திரத்துக்கு அருகேயுள்ளது. இத்தொகுதி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதார அமைச்சராக உள்ளார். இவர் சிறந்த எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். இதற்கான விழா வரும் ஜனவரி 6-ம் தேதி ஏனாமில நடக்க உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையே மல்லாடி, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருங்கிய நட்புடன் உள்ளார்.விரைவில் ஒய்எஸ்ஆர் கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில் ஆந்திராவில் 30க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வாரிய தலைவர் பதவிகளுக்கு சேர்மன்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரும் நேற்று விஜயவாடாவில் ஒரே நேரத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆந்திர முதல்வருடன் இணைந்து செயல்படுவேன்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கலந்து கொண்டு பேசுகையில், "தமிழகம்- புதுச்சேரியில் ஜெகன் மோகன் ரெட்டி போல ஒரு முதல்வர் கிடைக்க வேண்டுமென மக்கள் ஏக்கப்படுகிறார்கள். விரைவில் தேர்தலும் வர இருக்கிறது. ஏனாம் தொகுதியில் வரும் தேர்தலில் நானோ, எனது குடும்பத்தை சேர்ந்தவர்களோ போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெகனுடன் இணைந்து செயல்பட இருக்கிறேன்" என்று பேசியுள்ளார்.