சேலம் மாவட்டத்தில் பருவ மழை கைகொடுத்தும் நீரின்றி வறண்ட நிலையில் 40 ஏரிகள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் பருவ மழை போதிய அளவில் பெய்தபோதும் 16 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. 40 ஏரிகள் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளன.

நடப்பாண்டில் தற்போது வட கிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. குறிப்பாக சரபங்கா வடிநிலத்தில் உள்ள 89 ஏரிகளில் 16 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன.

கன்னங்குறிச்சி ஏரி, ஆத்தூர் புது ஏரி, நெய்க்காரப்பட்டி ஏரி, அம்மம்பாளையம் முட்டல் ஏரி, அக்ரஹாரம் பூலாவரி ஏரி, ஜங்கமசமுத்திரம் ஏரி, இனாம் பைரோஜி ஏரி, மூக்கனேரி, அய்யனார் கோயில் ஏரி, வலசக்கல்பட்டி ஏரி, அபிநவம் ஏரி, கல்லேரிப்பட்டி ஏரி, கொண்டையம்பள்ளி ஏரி, புத்திரகவுண்டம்பாளையம் ஏரி, திட்டச்சேரி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி ஆகியவை மட்டுமே 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.

மேலும், 7 ஏரிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நீர் நிரம்பியுள்ளது. 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் இருப்புடன் 20 ஏரிகளும், 50 சதவீதத்துக்கும் குறைவான நீர்இருப்புடன் 6 ஏரிகளும் உள்ளன. 40 ஏரிகள் நீரின்றி வறண்ட நிலையிலேயே உள்ளன.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “சேலம் மாவட்டத்தில் போதிய மழை பெய்துள்ளது. இருந்தும் ஏரிகளுக்கான நீர்வரத்துக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. ஏரிகளில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்பட்டும் கரைகள் சீரமைக்கப்படாமலும், முறையாக தூர்வாராமலும் வண்டல் மற்றும் சவுடு மண் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்காங்கே குட்டைகள் தோண்டப்பட்டதாலும், 40 ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. எனவே, குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்ட ஏரிகளில் மாவட்ட நிர்வாகம் முறையான ஆய்வு நடத்தி, வரும் நாட்களில் முறையாக தூர்வாரப்பட்டு, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in