

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தை அடுத்த மாதம் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என, ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் நேற்று தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி 23-ம் கட்ட விசாரணை கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணை நாளை (டிச.18) நிறைவு பெறுகிறது. இந்நிலையில் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 23-ம் கட்ட விசாரணை கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இன்று வரை இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிக்க மொத்தம் 49 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இதுவரை 42 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் நாளை சாட்சியம் அளிப்பார்கள். இதுவரை மொத்தம் 586 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், 775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது நடைபெறும் 23-ம் கட்ட விசாரணையில் தீயணைப்பு துறையினர், 3-ம் மைல் மற்றும் கடற்கரை சாலையில் உள்ள காவலர் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். கரோனா ஊரடங்கால் சில மாதங்கள் விசாரணை நடைபெறவில்லை. இனிமேல் தொடர்ந்து நடைபெறும். இன்னும் நிறைய பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.
ஆணையத்தின் அடுத்தக் கட்ட விசாரணை ஜனவரி மாதம் நடைபெறும். அந்த விசாரணையின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரிக்கப்படவுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார். அது ஜனவரி மாதமாக கூட இருக்கலாம். ரஜினிகாந்த் தற்போது சினிமா ஷூட்டிங்குகளுக்கு செல்ல தொடங்கிவிட்டார். எனவே, அவரை ஜனவரி மாதத்தில் சாட்சியாக விசாரணைக்கு அழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பப்படும். இந்த கட்ட விசாரணை முடிந்த பிறகு தான் அடுத்தக்கட்ட விசாரணைக்கான சாட்சிகள் பட்டியல் தயாரிக்கப்படும். எனவே, ஜனவரி மாதத்துக்கான விசாரணையில் ஆஜராவதற்கு அவருக்கு சம்மன் அனுப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார் அவர்.