

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்ற அரசு விழாவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் எம்பி, எம்எல்ஏ பெயர்கள் இல்லாததை கண்டித்து வட்டாட்சியரை காங்கிரஸார் முற்றுகையிட்டனர்.
காரைக்குடியில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதையொட்டி நிர்வாகம் சார்பில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் காங்கிரஸைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.
இதைக் கண்டித்து காங்கிரஸார் விழா ஏற்பாடுகளை செய்த வட்டாட்சியர் ஜெயந்தியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
‘பேனரை தீடீரென அச்சடித்ததால் எம்பி , எம்எல்ஏ பெயர்களை சேர்க்க முடியாமல் போனது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்,’ என்று வட்டாட்சியர் கூறியதை அடுத்து காங்கிரஸார் கலைந்து சென்றனர்.
பிறகு நடந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன் 133 பயனாளிகளுக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் சுரேந்திரன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.