7.5% இட ஒதுக்கீடு; அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பான வழக்கு: தேசிய மருத்துவ ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்று, கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள மாணவர்களுக்காக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு தனியார் கல்லூரிகளில் இடம்பெற்றுக் கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (டிச.17) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்கக் கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள் கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மனுதாரர் உள்ளிட்ட 60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த 60 மாணவர்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ள யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மீண்டும் நாளை (டிச.18) தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in