Published : 17 Dec 2020 07:17 PM
Last Updated : 17 Dec 2020 07:17 PM

சாலைகளில் மாடுகளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: விபத்துகளைத் தவிர்க்க மதுரை காவல்துறை விநோத அறிவிப்பு

சாலைகளில் நடமாடும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் மாடுகளை சாலைகளில் நடமாடவிடக்கூடாது என்றும், மீறி நடமாடினால் அவற்றை பறிமுதல் செய்யவும், அந்த மாடுகளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் மாவட்ட காவல்துறை விநோத அறிவிப்பு வெளியிட்டு போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் முதல் ஒத்தக்கடை வரையும், ஒத்தக்கடை முதல் திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி வரையும் சாலைகளில் நடமாடும் மாடுகளால் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து வருகிறது.

இந்த சாலையில் வளர்நகர், மதுரை உயர் நீதிமன்றக் கிளை, ஒத்தக்கடை ஜங்கன் போன்ற பகுதிகளில் மாடுகள் கும்பல், கும்பலாக சாலைகளின் நடுவில் படுத்து ஒய்வெடுப்பதும், சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக நடமாடுவதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

குறிப்பாக திருவாதவூர் சாலையில் திருமோகூர், புதுதாமரைப்பட்டி வரை 100-க்கும் மேற்பட்ட மாடுகள் மாலை 6 மணிக்கு மேல் சாலைகளில் மாட்டுத்தொழுவம்போல் படுத்து ஒய்வெடுக்கின்றன.

மாட்டுத்தாவணி முதல் ஒத்தக்கடை வரையுள்ள சாலையில் நடுவில் இண்டர்மீடியேட் தடுப்புச் சுவர் போடப்பட்டுள்ளது. இதில், இடையில் ஆங்காங்கே ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு வாகனங்கள் செல்வதற்காக குறுக்கு வழிப்பாதையும், இடைஇடையே இருச்சக்கர வாகனங்கள் செல்வதற்காக 10 அடிக்கு சிறு சந்தும், குறுக்கு வழிப்பாதையும் உள்ளன.

இந்த இடைவெளிகள் வழியாக அடிக்கடி மாடுகள் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு குறுக்காக பாய்ந்துவிடுகின்றன. அதனால், சாலைகளில் வேகமாக வரும் வாகனங்கள் எதிர்பராமல் குறுக்காக பாயும் மாடுகளில் மோதாமல் இருக்க பிரேக் போடும்போது பின்னால் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

அதுபோல், திருதாவூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை படுத்து தூங்குவதால் பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்களில் இந்த சாலைகளில் செல்ல முடியவில்லை. திருவாதவூர், புதுதாமரைப்பட்டி, ஒத்தக்கடை பகுதிகளில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை வீடுகளில் கட்டிப்போட்டு பராமரிப்பது இல்லை.

அவர்கள், ஒவ்வொருவரும் வீடுகளில் 20 முதல் 50 மாடுகள் வரை மொத்தமாக வளர்க்கின்றனர். காலைகளில் கட்டவிழ்த்துவிடும் மாடுகளை அவர்கள் மேய்க்க ஓட்டி செல்வதில்லை.

அந்த மாடுகள் காலை முதல் மதியம் வரை ஆங்காங்கே அதுவாகவே மேய்ந்துவிட்டு மாலையில் வீட்டிற்குச் செல்லாமல் சாலைகளிலே கிடக்கின்றன.

காலையில் பால் கறக்கப்பதற்காக மட்டுமே மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீ்ட்டிற்கு அழைத்து செல்கின்றனர். மற்ற நேரங்களில் அந்த மாடுகளுக்கு சாலைகளே மாட்டுத்தொழுவமாக உள்ளன.

அதனால், இந்த மாடுகளால் மதரை-மேலூர் சாலை, ஒத்தக்கடை-திருவாதவூர் சாலைகளில் அடிக்கடி விபத்தும், போக்குவரத்தும் ஸ்தம்பிப்பதால் மதுரை மாவட்ட காவல்துறை மாடுகள் வளர்க்கும் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டு, அதை போஸ்டர் அடித்து சாலைகளில் ஓட்டியுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சாலைகளில் மாடுகள் நடமாடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், தங்கள் மாடுகளை ஒரு வார காலத்திற்குள் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீறி மாடுகள் சாலைகளில் நடமாடினால் அவற்றை காவல்துறையும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களும் பறிமுதல் செய்துவிடும். பறிமுதல் செய்த மாடுகளுக்கு யாரும் உரிமை கொண்டாடமுடியாது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x