

பட்டியலின மக்கள் குறித்தும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்திருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் இளைஞரணித் தலைமை அலுவலகமான அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராகப் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த ஜாமீனை ரத்துசெய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தலைவர்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பொது வெளியில் பேசினால் மக்கள் மத்தியில் நீதித்துறை மீது எந்த மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதை யோசித்துப் பார்க்குமாறு எடுத்துரைத்தது.
அதேபோல, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு யார் வேண்டுமானலும், சிபாரிசு இருந்தால் நீதிபதி ஆகிவிடலாம் என்பதைப் போல் உள்ளதாகவும், இத்தகைய பேச்சுகள் மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள மாண்பைச் சீர்குலைத்துவிடும் எனவும் வருத்தம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு இன்று (டிச.17) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி இந்த விவகாரத்தில் புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில், வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக தனியாக மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து புகார்தாரருக்கு காவல்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வரும் ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.