

சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவிற்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. இந்த கமிட்டிக்கு சரியான பதில் தராவிட்டால், மறைத்து பொய் பேசினால், இங்கேயே அதிகாரியை சஸ்பெண்ட் செய்யலாம், டிஸ்மிஸ் செய்யலாம். ஏன், மிகக் கொடூரமான குற்றமாக இருந்தால் நேரடியாக சிறைக்கு கூட அனுப்பலாம், என சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டம் இன்று பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
சட்டசபை செயலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி வரவேற்றார். குழு உறுப்பினர்கள் பி.டி.ஆர்.,பழனிவேல்ராஜன் எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம், திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் பேசுகையில், குழுவிற்கு பதில் அளிக்கும் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் வெளியேறலாம். இது மிகமுக்கியமான கூட்டம். எனவே அருகில் உள்ளவர் அதிகாரி தானா என்பதை பக்கத்தில் இருக்கும் அதிகாரிகள் ஊர்ஜிதம் செய்துகொள்ளவேண்டும்.
பொதுக்கணக்குழு பற்றி இங்கிருக்கும் பலருக்கு தெரிந்திருக்கலாம், தெரியாதிருக்கலாம். ஆனால் இந்த குழுவின் நோக்கத்தையும் அதிகாரத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த கமிட்டிக்கு பி.எச்.பாண்டியன் கூறியதுபோல் வானளாவிய அதிகாரம் உள்ளது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், கவர்னரை தவிர மற்றவர்களை சமன் செய்து விசாரிக்க இந்த கமிட்டிக்கு அதிகாரம் உண்டு.
கேள்விகேட்கின்ற அதிகாரம் உண்டு. இந்த கமிட்டிக்கு சரியான பதில் தராவிட்டால், மறைத்து பொய்பேசினால், இங்கேயே அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம். சஸ்பெண்ட் செய்யலாம். அவருடைய பதவி உயர்வை
நிறுத்தலாம், டிஸ்மிஸ் செய்யலாம். ஏன், மிகக்கொடூரமான குற்றமாக இருந்தால் நேரடியாக சிறைக்கு கூட அனுப்பலாம்.
ஆயிரம் வேலைகள் இருந்தாலும் இந்த கமிட்டிக்கு யாரும் வரமுடியாது என்று சொல்லமுடியாது, என்றார்.
தொடர்ந்து துறைவாரியாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பொதுக்கணக்கு குழுவினரின் கேள்விக்கு துறைவாரியாக அதிகாரிகள் பதில் அளித்தனர்.