தென்காசி, வாசுதேவநல்லூர் தொகுதிகளை பொது தொகுதியாக அறிவிக்க வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தென்காசி, வாசுதேவநல்லூர் தொகுதிகளை பொது தொகுதியாக அறிவிக்க வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Updated on
1 min read

தனித் தொகுதியாக இருக்கும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி, வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளை பொதுத் தொகுதியாக மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த எம்.சந்திரமோகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் ஊரான முள்ளிக்குளம் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. தென்காசி நாடாளுமன்ற தொகுதி 1956 முதல் 1963 வரை பொதுத் தொகுதியாகவும், 1964 முதல் தற்போது வரை 56 ஆண்டுகளாக தனித் தொகுதியாகவும் உள்ளது.

இதேபோல் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி 1964 முதல் 1976 வரை பொதுத் தொகுதியாகவும், 1976-க்கு பிறகு தற்போது வரை 43 ஆண்டுகளாக தனித் தொகுதியாகவும் உள்ளது.

இதனால் இவ்விரு தொகுதிகளிலும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் நிலை உள்ளது. இதன் மூலம் இவ்விரு தொகுதிகளிலும் பிற வகுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு தொகுதியை பத்தாண்டுக்கு தனித் தொகுதியாக வைத்திருக்கலாம். பின்னர் தொகுதி சீரமைப்புக்கு தனித் தொகுதியை பொதுத் தொகுதியாகவும், பல ஆண்டுகள் பொது தொகுதியாக இருந்த தொகுதியை தனித் தொகுதியாகவும் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த விதியை மீறி தென்காசி நாடாளுமன்ற தொகுதி மற்றும் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் பல ஆண்டுகள் தனித் தொகுதியாக தொடர்கின்றன.

எனவே தென்காசி நாடாளுமன்ற தொகுதி மற்றும் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளை பொதுத் தொகுதியாக மாற்றவும், அதுவரை இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in