அரசு விழாவில் திமுக எம்எல்ஏ புறக்கணிப்பு; திருப்பத்தூர் அருகே திமுகவினர் போராட்டம்
திருப்பத்தூர் அருகே இன்று நடைபெற்ற மினி கிளினிக் திறக்கும் விழாவில் திமுக எம்எல்ஏ புறக்கணிக்கப்பட்டதால் அக்கட்சியினர் விழா நடைபெறும் இடத்துக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் கிராமப் பகுதிகளில் மினி கிளினிக் திறக்கும் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 இடங்களில் மினி கிளினிக்குகள் இன்று (டிச.17) திறக்கப்பட்டன. திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாடப்பள்ளி கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால், இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பியின் பெயர் சேர்க்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் திமுகவினர், விழா நடந்த இடத்துக்கு இன்று வந்தனர். நேராக மேடை அருகில் சென்ற எம்எல்ஏ நல்லதம்பி, "விழாவில் என்னுடைய பெயரை ஏன் புறக்கணித்தீர்கள்?" என ஆட்சியர் சிவன் அருளிடம் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைக் கண்ட அமைச்சர் கே.சி.வீரமணி, திமுக எம்எல்ஏவை வெளியேற்றும்படி எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.
உடனே, எஸ்.பி. விஜயகுமார் விழா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து, "நீங்கள் இங்கு இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வெளியில் செல்லுங்கள்" என்றார். இதனால், எம்எல்ஏவுக்கும், எஸ்.பி.க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த காவல் துறையினர் விழா மேடை அருகே வந்து எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் திமுகவினரை விழா நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதைக் கண்டித்த திமுகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து எம்எல்ஏ நல்லதம்பி கூறியதாவது:
"மினி கிளினிக் மாடப்பள்ளிக்கு வரவேண்டும் என்று கடும் முயற்சி செய்தவன் நான். சட்டப்பேரவையில் தொகுதி சம்பந்தமாக அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களில் முதல் பத்து இடத்தில் 9-வது இடத்தில் நான் உள்ளேன். அமைச்சர் கே.சி.வீரமணி எந்த இடத்தில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது.
திமுகவினர் செய்த நல்ல காரியங்கள் வெளியில் தெரியக்கூடாது என இப்படிச் செய்கிறார்கள். நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள் என எனக்குத் தகவல் வந்துள்ளது. என்னுடைய தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதியாக நான் பங்கேற்க இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா?.
மினி கிளினிக் அமைய இடமும், அதற்கான உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்தவன் நான். என்னால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று எஸ்.பி. கூறுகிறார். என் மீது எந்த வழக்கும் இல்லை. நான் குற்றச்செயல்களில் ஈடுபடவும் இல்லை. யார் சொத்தையும் நான் கொள்ளையடிக்கவில்லை. என்னால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நிரூபித்தால் எம்எல்ஏ பதவியை இப்போதே ராஜினாமா செய்கிறேன்.
விரைவில் முடியப்போகிற ஆட்சி அப்படித்தான் நடந்துகொள்ளும். தேர்தலை மனதில் வைத்துதான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிமுக அரசு நடத்துகிறது. இதற்கான பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்".
இவ்வாறு திமுக எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்தார்.
