Last Updated : 17 Dec, 2020 06:28 PM

 

Published : 17 Dec 2020 06:28 PM
Last Updated : 17 Dec 2020 06:28 PM

ஜவ்வாதுமலையில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, கல்கருவிகள் கண்டெடுப்பு: திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் நேரில் ஆய்வு

ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை ஆய்வுக் குழுவினருடன் எஸ்.பி. விஜயகுமார் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்கருவிகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி தலைமையில் ஆராய்ச்சி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்றுத் தடயங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் கள ஆய்வு நடத்தியபோது, சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்கருவிகள் மற்றும் கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் இதழியலாளர் பிரியம்வதா விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் மோகன்காந்தி கூறுகையில், "திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கள ஆய்வு நடத்தியபோது, புதூர்நாடு ஊராட்சியில் உள்ள மொழலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் 4 கல்வெட்டுகளைக் கண்டெடுத்தோம். இக்கல்வெட்டுகள், சோழர், விஜயநகர மன்னர்களைப் பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலின் இடது பக்கத்தில் 4 கல்வெட்டுகள் நடப்பட்டுள்ளன. இதில் முதல் கல்வெட்டு கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். விஜயநகர காலத்து மன்னன் கம்பண்ணனைப் பற்றி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் கம்பண்ணன், மகாமண்டலேஸ்வரன் என்றும் கம்பண்ண உடையார் என்றும் இக்கல்வெட்டு குறிக்கிறது. ஆடையூர் நாட்டில் ஜவ்வாதுமலை இருந்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது.

ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு

2-ம் கல்வெட்டு வரி வசூல் செய்யும் அரசாணை கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு ஆடையூர் நாட்டில் ஜவ்வாதுமலை இருந்ததைக் குறிக்கிறது. ஆடையூர் என்பது திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள ஒரு சிறிய கிராமமாகும்.

இந்த ஊரைத் தலைமையிடமாக கொண்ட ஆடையூர் நாடாழ்வான், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புதூர்நாடு பகுதியையும் முந்தைய காலங்களில் ஆட்சி செய்துள்ளார். ஆடையூர் நாடாழ்வானுக்கு மேலே ஒரு அரசு இருந்திருக்கிறது. அது சோழர்களாக இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

சோழர்கள் வரி வசூல் பற்றிய ஆணை இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில், சோழர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரியை மட்டுமே மக்களிடம் இருந்து ஆடையூர் நாடாழ்வான் வசூலிக்க வேண்டும் என்றும், அதை மீறி வரி வசூல் செய்தால் நாடாழ்வான் என்ற பட்டம் மன்னனுக்குக் கிடையாது என்பதும் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே, சோழர்களின் வரியை முறைப்படுத்தும் கல்வெட்டாக இதைப் பார்க்க முடிகிறது.

ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்

3-வது கல்வெட்டு சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டாகும். குலோத்துங்கனின் 41-ம் ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதில், நிகரிலி சோழ மண்டலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கங்கர்களிடம் இருந்து ராஜராஜசோழன் இப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளான். நிகரிலி என்பது ராஜராஜனுக்கு யாரும் நிகர் இல்லாதவர்கள் என்ற பொருளில் இம்மண்டலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிகரிலி சோழமண்டலம் என்பது தருமபுரி, கர்நாடகா பகுதிகளில் உள்ள பெங்களூரு, கோலார், டும்கூர் உள்ளிட்ட பகுதிகளாகும்.

சில கல்வெட்டுகள் ஜவ்வாதுமலை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. நிகரிலி சோழ மண்டலம், தகடூர் (தருமபுரி) நாட்டைக் குறிப்பிடுவதால் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு ஆடையூர் நாட்டிலும், தகடூர் நாட்டிலும் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

4-வது கல்வெட்டு ஆடையூர் நாட்டில் உள்ள வேளாண்மை வாழ்வியல் பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. அதேபோல, புதூர் நாட்டுக்கு உட்பட்ட சித்தூரில் உள்ள அனுமன் கோயிலில் 12 கல்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்கருவிகள் மனிதன் இரும்பு மற்றும் செம்பையும் கண்டறிவதற்கு முன்பாகப் பயன்படுத்திய கல்கருவிகளாகும். இது சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகும்.

ஜவ்வாதுமலையின் பண்டையகால பெயர் நவிரமலையாகும். இங்கு ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கப்பெறுவதால் தமிழக அரசு ஜவ்வாதுமலையை அதன் பண்டைய பெயரான நவிரமலை என்று பெயர் மாற்றம் செய்ய அரசுக்கு ஆய்வுக் குழு சார்பில் கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x