பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? பிக் பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

கமல்ஹாசன் - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
கமல்ஹாசன் - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிச.17), அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதற்குப் பிறகு முதல்வர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் சிக்குவது குறித்து கமல் கருத்து தெரிவிக்கும்போது, அரசு எப்படியோ அந்த வழியாகத்தான் அதிகாரிகளும் என விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்வர் பதில் அளித்துப் பேசியதாவது:

"இது தவறான கருத்து. அரசாங்கம்தானே சோதனை நடத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை யாருக்குக் கீழ் வருகிறது? தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமென்றுதானே நினைக்கிறது. எங்கும் தவறு நடக்கக் கூடாது, தவறு நடந்தால் அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவர் புதிதாக கட்சியைத் தொடங்கியுள்ளார். ரிடையர்டு ஆகி வந்துள்ளார். அவருக்கு என்ன தெரியும்? 70 வயதாகிறது. 70 வயதில் பிக் பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதைப் பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது.

அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுவிடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டுவிடும்.

ஆக்கபூர்வமான திட்டங்கள் எத்தனையோ உள்ளன. நதிகள் இணைப்பைக் காட்டலாம். விவசாயிகள் மேற்கொள்ளும் பண்ணைத் திட்டம், புதிதாக என்னென்ன நடவு செய்கிறார்கள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை எவை என மாணவர்களுக்கு நல்ல அறிவுரையைக் கொடுங்கள்.

எம்ஜிஆர் சினிமா மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி, நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியுள்ளாரா? அந்தப் படத்தைப் பார்த்தால் அத்துடன் அந்தக் குடும்பம் காலியாகிவிடும், அதுபோன்ற படங்களில்தான் நடிக்கின்றனர். எனவே, அவர் சொல்லும் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வளவோ சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் போடுகின்ற திட்டங்கள்தான் இப்போதும் உயிரோட்டமுள்ள திட்டங்களாக இருந்து கொண்டிருக்கின்றன".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in