

நடப்பாண்டில் 18-வது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால், பிரதமர் மோடி இதில் தலையிட்டு தற்போது உயர்த்திய ரூ.100-ஐ உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி இன்று (டிச. 17) கூறியதாவது:
"உலகச் சந்தையில் எரிவாயு, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையையும் சமையல் எரிவாயு விலையையும் இங்கு உயர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ரூ.350 ஆக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மானியத்தையும் எடுத்துவிட்டனர். ஒரு ரூபாய் ஏற்றினால் தெருவில் இறங்கி பாஜக போராடிவிட்டு தற்போது விலையைக் கடுமையாக உயர்த்திவிட்டது. இது நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம்.
நடப்பாண்டில் 18-வது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.610 இருந்த சிலிண்டர் விலையை ரூ.710 ஆக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. மக்களுக்கு மிகப்பெரிய சுமை ஏறியுள்ளதால் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு முதல் கட்டமாக 100 ரூபாய் உயர்த்தியதைக் குறைக்க வேண்டும். மீதமுள்ள தொகையையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பிரதமர் மோடி அழைத்துப் பேச வேண்டும்.
மருத்துவப் படிப்பில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது. புதுச்சேரி அரசு இவ்வழக்கை மேல் முறையீடு செய்கிறது.
அரசுப் பள்ளிகளில் 10% உள் ஒதுக்கீடு பெறுவது தொடர்பான கோப்பையும் மத்திய அரசுக்கு கிரண்பேடி அனுப்பிவிட்டார். அரசுப் பள்ளியில் படித்த மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நாளை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. நாங்கள் அரசு சார்பில் வலியுறுத்துவோம்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.