

விவசாயிகளின் போராட்டம் வருத்தமளிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் எங்களது கூட்டணியின் முதன்மைக் கட்சியாக அதிமுக செயல்படுகிறது. இது வெற்றிக் கூட்டணியாக உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் சிறப்பாக செயல்படுகிறோம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக, அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொடுத்து, அவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டிருக்கிறது.
மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சி, கூட்டணி தொடர வேண்டும். அந்த வகையில் வரும் நாட்களில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் முழு அங்கீகாரம் கொடுபார்கள் என நம்புகிறோம்.
விவசாயிகளின் தொடர் போராட்டம் வருத்தமளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயம் சார்ந்த அரசுகள் தான். விவசாயிகளின் வருங்கால வளர்ச்சி, வருமானம், வாழ்வாதாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் விவசாய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன் தாக்கம், லாபம் ஆகியவை விவசாயிகளுக்கு வரும் மாதங்களில் மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடிய வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அதன் முழுமையான பலனை நன்கு அறிந்த பின்னரே தமிழக அரசு ஆதரிக்கிறது.
இந்தச் சூழலில் ஓரிரு மாநிலங்களில் மட்டுமே சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல், விவசாயிகளின் லாபத்தில் இருந்து லாபத்தை எடுக்கக்கூடிய தரகர்களின் கட்டாயம், நிர்பந்தத்தின் அடிப்படையில் இன்றைக்கு விவசாயிகளின் போராட்டம் தொடரக்கூடிய துரதிர்ஷடமான நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பொருத்தவரையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. கெளரவம் பார்க்காமல் தொடர்ந்து பேசவும் தயாராக உள்ளது. விவசாய பெருங்குடி மக்கள் தங்களின் நன்மையைக் கருதி எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக செய்யக்கூடிய சதியில் விழக்கூடாது.
விவசாயப் பிரதிநிதிகள், நீதிமன்றம் கூறியது போல் அவர்களுக்குள் குழுவை அமைத்து மீண்டும் அரசுடன் பேசி நன்மைபயக்கக் கூடிய நல்ல முடிவை வரும் நாட்களில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.