

தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று காகிதக் கப்பல் விடும் நூதன போராட்டம் நடத்தினர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிரதான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், உள்புற பகுதிகளில் குறிப்பாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக மாநகராட்சி 17 வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் நகர் 10, 11-வது தெருக்கள் மற்றும் கதிர்வேல் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது.
மழைநீருடன் குப்பைகள், கழிவுகள் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு வாரத்துக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மழைநீரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ராஜீவ் நகர் 10-வது தெருவில் இன்று தேங்கியுள்ள மழைநீரில் காகித கப்பல் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். மாநகர பொருளாளர் பாலா, மாநகரக் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், மனோ, காளி, முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.