

தமிழகம் முழுவதும் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளில் 6 மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக் கடன்களுக்கான தவணைக் காலத்தை ஓராண்டாக நீட்டித்து வழங்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச.17) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளில் 6 மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக் கடன்களுக்கான தவணைக் காலத்தை ஓராண்டாக நீட்டித்து வழங்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட்ட இக்கடன்களுக்கான தவணைக் காலம் டிசம்பர் மாதத்தோடு முடிவடைவதால் அதற்கான வட்டியைக் கட்டி மறு அடகு வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது கூடுதல் சுமையாகி இருக்கிறது. எனவே, 6 மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக் கடன்கள் அனைத்தையும் ஓராண்டு தவணையாக மாற்றி அறிவிக்க வேண்டும்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.