

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கட்டப்படும் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள், ஜெயலலிதாவை தெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். அவர்கள் குடும்பத்குல தெய்வமாகக்கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்த கோயிலில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோாின் முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும். அதுமட்டுமில்லாது, இந்தக் கோயிலில் அனைவரும் வழிபடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றார்.