Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

தமிழகத்தில் மின்கட்டணம் உயர வாய்ப்பு இல்லை: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

நடப்பு நிதியாண்டுக்கான மின்கட்டணத்தை நிர்ணயம் செய்யும் மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் இதுவரை சமர்ப்பிக்காததால், தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வதற்கான வாய்ப்பு இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மின்வாரியத்தின் செயல்பாட்டைக் கண்காணிப்பது, மின்கட்டணத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட பணிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மின்வாரியம் ஆண்டுதோறும் செப்.30-க்குள் தனது மொத்த வருவாய் தேவைஅறிக்கை மற்றும் மின்கட்டணம் நிர்ணயம் செய்யும் மனு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மொத்த வருவாய் தேவை அறிக்கையை ஆணையம் பரிசீலனை செய்யும். அதில், வரவை விட செலவு அதிகமாக இருந்தால் மின்கட்டணம் உயர்த்தப்படும்.

மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டால், அதற்கான உத்தேச அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். பின்னர், ஏப்ரல் முதல் மின்கட்டண உயர்வை அமல்படுத்தும். இந்நிலையில், 2020-21ம் நிதியாண்டுக்கான வருவாய் தேவை அறிக்கை மற்றும் மின்கட்டண நிர்ணய மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் கடந்த மாதம் வரை சமர்ப்பிக்கவில்லை.

ஏற்கெனவே, மின்வாரியம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித் தவித்து வருவதால், கடந்த 2019-ம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது உள்ளாட்சித் தேர்தல் காரணமாக உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என தமிழகஅரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான மனுவை மின்வாரியம்,ஆணையத்தில் சமர்ப்பிக்காமல்உள்ளது. எனவே, மின்கட்டணம்தற்போதைக்கு உயர வாய்ப்பு இல்லை என மின்வாரிய அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x