சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு டிச.21-ல் தமிழகம் வருகை: மாவட்ட ஆட்சியர்கள், அரசியல் கட்சிகளுடன் 2 நாள் ஆலோசனை

சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு டிச.21-ல் தமிழகம் வருகை: மாவட்ட ஆட்சியர்கள், அரசியல் கட்சிகளுடன் 2 நாள் ஆலோசனை
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிகாரிகள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த, இந்திய தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா தலைமயிலான குழுவினர் வரும் டிசம்பர் 21-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2011-ம்ஆண்டு அமைந்த 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாக்காளர் பட்டியல்திருத்தப்பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகள் தயார்படுத்துதல், தேர்தல் பணியாளர்களை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், தற்போது கரோனா பரவல் உள்ளதால், வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், வாக்காளர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுக் கப்பட்டுள்ளது. இதனால், புதிய வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய தேர்தல்ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழுவினர், வரும் டிச.21-ம் தேதி தமிழகம் வருகின்றனர். சென்னையில், 21-ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்டகாவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். முன்னதாகஅன்று காலை 11.30 மணிக்குதமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள், மனுக்கள் பெறப்படு கின்றன.

தொடர்ந்து டிச.22-ம் தேதிதேர்தல் ஆணைய குழுவினர், மாநிலத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை உயர் அதிகாரரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். குறிப்பாக, கரோனா காலத்திலும் சமீபத்தில் பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது. இதில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதிஅளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நவ.16 தொடங்கிய நிலையில், இறுதி நாளான டிச.15-ம் தேதி வரை மொத்தம் 30 லட்சத்து 68,713 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in