

தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். நத்தமேடு கிராமத்தில் எம்.பி. செந்தில்குமாரை வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீஸார் தலையிட்டு எம்.பி.யை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து எம்பி செந்தில்குமார் கூறும்போது, ‘இடஒதுக்கீடு போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட 21 நபர்களில் சுப்பிரமணி என்பவர் தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இந்த ஊரில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி வறுமையில் தவிப்பதாக தெரியவந்தது. அவருக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்கத் திட்டமிட்டோம். இதுபற்றி, ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் கவனத்துக்கு தெரிவித்து விட்டே நிதி உதவி அளிக்க வந்தோம். ஆனால், தனியார் இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு பிரிவினர் தடுத்து தாக்க முற்பட்டனர். தனியார் இடம் என்பதால் அவர்கள் பேச்சுக்கு மதிப்பளித்து அங்கே செல்வதை தவிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தோம். அங்கும் வந்து பிரச்சினை செய்கின்றனர்.
சுப்பிரமணியின் மனைவிக்கு நிதி அளிக்க முடியாதபடி, ஊரைச் சேர்ந்தவர்கள் அவரை தலைமறைவாக்கி விட்டனர். அவருக்கு தர ஏற்பாடு செய்த தொகை என்னிடம்தான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அந்த அம்மையார் என்னை சந்தித்து பெற்றுக் கொள்ளலாம். பாமக தலைமை இதைப் பார்த்துவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் அதை வரவேற்போம்’ என்றார். எம்பி புகார் தராததால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.