

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை தியாகராய நகரில் ரூ.36கோடியில் அமைக்கப்படும் பல்லடுக்கு தானியங்கி வாகன நிறுத்தப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கரவாகனங்களுக்கு மேல் இயக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக தியாகராயநகரில் பாண்டிபஜார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்நிறுத்தப்படும் வாகனங்களால் சாலைகளின் அகலம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையே பாண்டிபஜார் பகுதியில் மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நடந்து சென்று கடைகளில் பொருட்களை வாங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதிகளை சுற்றியுள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் தியாகராயா சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் ரூ.36கோடியே 54 லட்சம் செலவில்9 அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்தக் கட்டிடம் 16 ஆயிரத்து 146 சதுரஅடி பரப்பளவில், 2 தரைகீழ் தளங்கள், தரை தளம் மற்றும் 6 மேல் தளங்கள் என 9 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைகீழ் தளங்களில் 513 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். தரை தளம் மற்றும் 6 மேல்தளங்களில் 222 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தமுடியும். இது முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து, பல்லடுக்கு வாகன நிறுத்தம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘வாகன நிறுத்தத்தின் பெரும்பாலான பணிகளும் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. கார்களை நிறுத்த ஒருமணி நேரத்துக்கு ரூ.20, இரு சக்கர வாகனங்களை நிறுத்த ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால், தியாகராயநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்’’ என்றனர்.