

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற தினத்தைக் கொண்டாடும் வகையில், முப்படைகளின் சார்பில், போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. முப்படைகளின் வீரர்கள் வீர, தீரத்துடன் போர் புரிந்து இந்த வெற்றியை பெற்றுத் தந்தனர். இதைத் தொடர்ந்து, முப்படைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிச.16-ம்தேதி ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த வெற்றி கிடைத்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இப்போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், தென் பகுதிக்கான ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், கடற்படை மற்றும் விமானப் படை சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இப்போரில் காயம் அடைந்த வீரர்களான கிருஷ்ணசாமி, சாமுவேல் ராஜ், உயிர்நீத்த அலெக்சாண்டரின் மனைவி லலிதா அலெக்சாண்டர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இத்தகவலை பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.