

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ள 409 பேருக்கு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் சார்பில், நேற்று இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம் சிட்லப்பாக்கம் ஏரியில் சூழல் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இந்நிதியில் 101 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவு கொண்ட சிட்லப்பக்கம் ஏரிப் பகுதியை சீரமைக்கும் வகையில், இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் தடுப்புகளை ஏற்படுத்தி, கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.
இதையடுத்து முதல்கட்டமாக 403 ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர், கடந்த செப்.18-ம் தேதி நோட்டீஸ் வழங்கத் தொடங்கினர். 20 வீடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் தகராறில் ஈடுபட்டதால் நோட்டீஸ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் செப்.23, 24 ஆகிய தேதிகளில் நோட்டீஸ் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று, இறுதியாக 409 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 21 நாட்களுக்குள் 409 பேரும் தங்கள் இருப்பிடத்தைக் காலி செய்ய வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரியின் ஆக்கிரமிப்பாளர் சிலருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த நோட்டீஸில், நீங்கள் வசிக்கும் இப்பகுதி உங்களுடையதுதான் என்பதற்கு ஆவணங்கள் எதுவும் இருந்தால் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டோம். அதன்படி, ஏராளமானவர்கள் ஆவணங்களை வழங்கினர். அந்த ஆவணங்கள் மீது வருவாய்த் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்தும் தனிநபர் சார்ந்த ஆவணங்களாகத்தான் இருந்தன. ஆனால் ஆக்கிரமிப்பு இடம் அவர்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை யாரும் வழங்கவில்லை. தற்போது அவர்களுக்கு இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குப் பிறகு இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிட்லப்பாக்கம் ஏரி, தாங்கல் ஏரிப் பகுதிகளை அரசியல் பிரமுகர்கள் கூறுபோட்டு விற்றுள்ளனர். 101.40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிப் பகுதிகள் தற்போது 47.92 நீர்பிடிப்புப் பகுதியாக சுருங்கியுள்ளது.
நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் அரசியல் கட்சியினரின் பேச்சை கேட்டுக் கொண்டு அரசு அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக இருந்தாலும் வருவாய்த் துறை, காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.