Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரம்பிய வேகத்தில் தண்ணீர் குறையும் மர்மம்? - அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பெரிய தெப்பக்குளங்களில் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் முக்கியமானது.

மன்னர் திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்தக் குளம் மதுரையின் அடையாளங்களில் ஒன்று. இங்கு நடக்கும் தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். இந்தக் குளம் கடந்த வாரம் வைகை ஆற்று தண்ணீர் கொண்டு நிரப்பப்பட்டது. இந்த ஆண்டில் 4-வது முறையாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால், நிரம்பிய வேகத்தில் தண்ணீர் குறைந்து விடுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் ஆவியாக வாய்ப்பில்லை. தொடர்மழையால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் தண்ணீர் உறிஞ்சப் படவும் வாய்ப்பில்லை. ஆனால் கடந்த வாரம் நிரப்பப்பட்ட தண்ணீர் அதற்குள் 2 அடி வரை குறைந்துள்ளது. இதற்கு முன்பும் இதேபோலக் குறைந்தது.

இதுகுறித்து தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என்.நரேந்திரபாபு கூறியதாவது:

1645-ம் ஆண்டில் மன்னர் திருமலை நாயக்கர் இந்தக் குளத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் குளம் வைகை ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 மீட்டர் ஆழத்தில், சுமார் 36 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் திறன் கொண்டது. 5 மீட்டர் ஆழத்தில் 43.75 கோடி லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். 1645 முதல் 1950 வரை, மழைக்காலம் மற்றும் வெள்ளத்தின் போது, ​​வைகை ஆற்று தண்ணீர் தானாகவே வந்து தெப்பக்குளம் நிரம்பியது. சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்யும் மழைநீரும் இக்குளத்துக்கு வந்துள்ளது.

வைகை அணை கட்டிய பிறகு வைகை ஆற்றில் நீரின் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் இயல்பாக வரக்கூடிய தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் நிரப்பப்பட்ட தண்ணீர் அதற்குள் 2 அடிவரை குறைந்துள்ளது. இவ்வளவு வேகத்தில் தண்ணீர் குறைய வாய்ப்பில்லை. அதனால் தெப்பக்குளத்தின் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறிக் கொண்டிருக்கலாம்.

கடந்த காலத்தில் குளத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் தண்ணீர் வெளியேறக் கூடிய கால்வாயும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகம், தண்ணீர் எப்படி குறைகிறது என்பதை ஆய்வு செய்து, தெப்பக்குளத்தில் நிரந்தரமாகத் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்துக்கு இயல்பாக தண்ணீர் வரும் பழமையான கால்வாய்களை கண்டறிந்து தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x