

லஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை அகற்றப்பட்டுள்ளதால் பேருந்து பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு மீண்டும் நிழற்குடையை அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லஸ் சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பல ஆண்டு களாக இருந்து வந்த பேருந்து நிழற்குடை சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியால் அகற்றப்பட்டது. அதன் பிறகு அந்த இடத்தில் ஓலையிலான நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதுவும் நீக்கப்பட்டதால் பயணிகள் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் மயிலாப் பூர், அடையார், திருவான்மியூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதி களுக்கான பேருந்துகள் செல் கின்றன. தினமும் ஆயிரக்கணக் கானோர் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் நடைபாதை கடைகள் உள்ளதால், பேருந்து பயணிகள் தற்போது அங்குமிங்கும் அலை கழிக்கப்படுகின்றனர்.
இது குறித்து பேருந்து பயணி கலா கூறும்போது, “தினமும் மாலையில் என் மகனை பள்ளியிலிருந்து அழைத்துவர அடையாறு செல்வேன். தற்போது நிழற்குடை இல்லாததால், மழை நேரங்களில் எங்கு ஒதுங்கு வது என்று தெரியவில்லை” என்றார்.
இது குறித்து 123-வது வார்டு கவுன்சிலர் பி.ஜான்சிராணி கூறும்போது, “பேருந்து நிழற் குடை பழுதடைந்திருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை நீக்கியுள்ளனர். விரைவில் புது நிழற்குடை அமைக்கப்படும்” என்றார்.