

ஜமுனாமரத்தூர் கோலப்பன் ஏரியில் 8 மாதங்களுக்குப் பிறகு படகு சவாரி நேற்று தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் உள்ள கோலப்பன் ஏரியில் படகு சவாரி பிரசித்திப் பெற்றது. ஜமுனாமரத்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சவாரி செய்ய அதிகளவில் சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். கரோனா ஊரடங்கால் கோலப்பன் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்ட நிலையில், ‘நிவர்’ புயல் தாக்கத் தால் பெய்த கனமழையால் கோலப்பன் ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது.
எனவே, ஜமுனாமரத்தூர் பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்களுக்கு படகு சவாரி சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஜமுனாமரத்தூரில் உள்ள பூங்கா, கோலப்பன் ஏரி, பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வருபவர்களால் சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு வருமானமும் கிடைத்து வந்தது.
கோலப்பன் ஏரியில் படகு சவாரிக்காக 2 மோட்டார் படகுகள், 3 பெடல் படகுகள், 1 துடுப்பு படகுகள் உள்ளன. படகு சேவை பணியில் இருந்த 10 பேருக்கு கரோனா ஊரடங்கால் யாருக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே, கோலப்பன் ஏரியில் மீண்டும் படகு சவாரி தொடங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில், கோலப்பன் ஏரியில் படகு சவாரி சேவையை ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜீவா மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார். இதில், பொறியாளர் தமிழ்செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
8 மாதங்களுக்குப் பிறகு கோலப் பன் ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். பீமன் நீர்வீழ்ச்சி பகுதிக்கு ஓரிரு நாளில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.