

சட்டத்தை மீறியதால் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலின் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாற்றுத்திறனாளிகள் 62 பேருக்கு ரூ.26.44 லட்சம் மதிப்பிலான நவீன சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், துணைத் தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு அமைச்சர் ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''முதல்வர் பழனிசாமி மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். சட்டத்தை மீறியதால் கமல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் அனைவருக்கும் சமம். சட்டப்படி நடத்தினால் அனுமதி மறுக்கப்படாது.
ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுக தொண்டர்கள் வலுவாக இருப்பதால், ரஜினி, கமல் ஆகியோர் தேர்தலில் பிரச்சாரம் செய்தாலும் எங்களைப் பாதிக்காது'' என்று கூறினார்.