Published : 16 Dec 2020 07:15 PM
Last Updated : 16 Dec 2020 07:15 PM

நான் விவசாயி என்று ஸ்டாலின் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி

நான் விவசாயி என்று ஸ்டாலின் சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிச.16), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கரோனா தடுப்பு மருந்து குறித்து?

இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் குணப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வந்தவுடன், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பாக இலவசமாக வழங்கப்படும்.

கரோனா காலமாக இருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தற்போது குறைந்துகொண்டு வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிகின்றனரா என்பதைக் காணவே நான் திறந்த ஜீப் வாகனத்தில் வந்தேன். பலர் முகக்கவசம் அணியாமல் உள்ளார்கள். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமாக இருமினாலே இந்நோய்த் தொற்று அருகிலுள்ள அனைவரையும் தாக்கும்.

இந்நோய்த் தொற்றுப் பரவல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக் கூடியதாக இருப்பதால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தற்போது வெளிநாடுகளில் மீண்டும் அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்புதான் மிக மிக முக்கியம்.

தமிழக விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கக்கூடிய மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறதே?

அது எதிர்க்கட்சி செய்து கொண்டிருக்கும் சூழ்ச்சி. அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கு ஆதாயம் தேடுவதற்காக சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

நான் ஏற்கெனவே பலமுறை சொல்லிவிட்டேன். தமிழக அரசைப் பொறுத்தவரை, விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற எந்தத் திட்டமாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக அரசு, விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கும் என்பதை அறுதியிட்டு, உறுதியிட்டுத் தெரிவிக்கிறேன். இதை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவியுங்கள்.

நீங்கள் ஒரு விவசாயியே இல்லை, விவசாயியாக இருந்தால் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள் என்று ஸ்டாலின் கூறுகிறாரே?

அவர் சொல்லி நான் விவசாயியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயி என்று எனக்குத் தெரியும். எங்கள் ஊரில் இருப்பவர்களுக்குத் தெரியும். நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர் ஒன்றும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், விவசாயியாக இருந்தால்தானே அவருக்குத் தெரியும்.

விவசாயியாக இருந்தால், விவசாய மசோதாவுக்கு எதிராக ராஜினாமா செய்ய வேண்டும் என்று?

மத்திய அரசு கொண்டுவந்த இந்த மூன்று சட்டங்களால் விவசாயிகள் எப்படி பாதிக்கிறார்கள்? இப்போதுகூட, கரூர் மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெற்றது. என்னுடைய அழைப்பை ஏற்று, கரூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள். எல்லா விவசாயிகளும் பாராட்டிப் பேசினார்கள். இந்த மூன்று சட்டங்களின் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களா? எங்கேயோ உள்ள விவசாயிகள், அங்கிருக்கின்ற ஏஜெண்டுகள் பயன்பெறுவதற்காக, இங்கே இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகளை மையமாக வைத்து அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

வருகின்ற தேர்தலை அவர்கள் மனதில் வைத்து இப்படிப்பட்ட சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள், எல்லா விவசாயிகளுக்கும் நன்றாகத் தெரியும். பலமுறை நான் இந்த மூன்று சட்டங்களைப் பற்றி விளக்கிப் பேசிவிட்டேன். விவசாயப் பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டத்தில் கூட இதைப்பற்றி விளக்கிப் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு விவசாயிகளெல்லாம் இந்தச் சட்டத்தை வரவேற்கிறார்கள்.

அங்கெல்லாம், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை ஏஜெண்ட் மூலமாகத்தான் விற்பனை செய்ய முடியும். அந்த ஏஜெண்டுகள்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏஜெண்டுகளுக்குத் துணையாகத்தான் இங்கிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், விவசாயிகளுக்காக அல்ல.

நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்...

நாங்கள் இப்போது வரையிலும் இருந்துகொண்டுதானே இருக்கிறோம். எந்தக் கட்சியும் விலகிப் போகவில்லையே.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதா?

நாங்கள்தான் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறோம். அதாவது, அதிமுக தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கட்சிகள் தொடர்ந்து எங்கள் கூட்டணியில்தான் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரும் எந்தத் திட்டத்தையும் நன்மை, தீமை ஆராயாமல் ஊழல் செய்வதற்காகவே ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே…

எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள், எந்தத் திட்டத்தை நாங்கள் ஆதரித்திருக்கிறோம், எந்தத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்று சொல்லுங்கள். நான் ஏற்கெனவே பலமுறை கூறியிருக்கிறேன்.

அதற்கு எடுத்துக்காட்டு நீட் தேர்வுதான் என்று...

நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? எங்களுடைய சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அழகாகப் பேசினாரே. நீட் தேர்வை 2010ஆம் ஆண்டில் திமுக, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதுதான் கொண்டு வந்தார்கள். அப்போது வாய் மூடி மவுனமாக இருந்தீர்கள் அல்லவா? பதவி வேண்டும், பதவி சுகம் வேண்டும், நாட்டு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. அப்போது நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. அங்கம் வகித்தது திமுக. கொண்டு வந்தவர்கள் அவர்கள், தடுத்து நிறுத்துவதற்குப் போராடியது நாங்கள், முடியவில்லை.

ஆகவே, கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவியர், ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர் ஒருவர்கூட பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவந்தோம். இதனை யார் கொண்டு வந்தார்கள்? எதிர்க்கட்சியினர் கேட்டார்களா? பொதுமக்கள் கேட்டார்களா, ஒருவரும் கேட்கவில்லை. நாங்களாகவே கொண்டு வந்தோம்.

நான் அரசுப் பள்ளியில் படித்த மாணவன். கிராமத்திலும், நகரத்திலும் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த 41 சதவீத மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவ, மாணவியருக்கு அவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கொண்டு வந்தோம்.

இந்த நீட் தேர்வினால் மட்டும் பாதிக்கவில்லை. நீட் தேர்வு வருவதற்கு முன்பு நுழைவுத்தேர்வு இருந்ததே, அப்போது 40 மாணவர்கள்தான் படித்தார்கள். அதையும் நான் பார்த்துத்தான் உள் ஒதுக்கீடு கொண்டு வந்தேன். உள் ஒதுக்கீடு கொண்டு வந்தததற்குக் காரணமே அரசுப் பள்ளியில் படிக்கின்ற 41 சதவீதம் மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதுவும் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்தச் சட்டத்தையே கொண்டு வந்தேன்.

நுழைவுத்தேர்வு இருந்தபோதும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 40 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு நீட் தேர்வின் மூலமாகவும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு 6 மாணவர்களுக்குத்தான் இடம் கிடைத்தது.

இதையெல்லாம் ஆராய்ந்துதான் அரசாங்கம் 41 சதவீதம் அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு போதிய மருத்துவ இடம் கிடைக்க வேண்டுமென்பதற்காக, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகத்தான் உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து, அதன்மூலம் 313 மருத்துவ இடங்களைக் கொடுத்தோம்.

அடுத்த ஆண்டு 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குகின்றபோது, கூடுதலாக 1,650 இடங்கள் தோற்றுவிக்கப்படும். அப்போது சுமார் 125 முதல் 130 மருத்துவ இடங்கள் கூடுதலாக வரும்போது, சுமார் 440 மருத்துவ இடங்கள் உள் ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள ஏழை, எளிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களும் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதன் அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டுவந்திருக்கிறோம்.

கரூர் பேருந்து நிலையம் எப்போது முடியும்?

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஒருவர் விடமாட்டேன் என்கிறாரே. விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும், நீங்கள் எண்ணியபடி இங்கே பேருந்து நிலையம் அமையும்.

கரூரில், மக்கள் பிரச்சினைகளை வைத்து இரண்டு கட்சிகளும் அரசியல் செய்வதாக...

நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களைப் பொறுத்தவரை பொதுமக்களுக்காகப் பேருந்து நிலையம் கட்ட வேண்டும். மேலும், வளர்ந்து வருகின்ற நகரத்திற்கு, அதற்கேற்றவாறு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அதற்குத் தக்கவாறு நிலத்தைத் தேர்வு செய்து, பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x