இலங்கைக்குக் கடத்த முயற்சி: வேம்பாரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

வேம்பார் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த இருந்த கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வேம்பார் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த இருந்த கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

வேம்பார் கடல் பகுதியில் இலங்கைக்குக் கடத்த இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வேம்பார் கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகளை இலங்கைக்குக் கடத்த இருப்பதாக சூரங்குடி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வேம்பார் காவல்நிலைய ஆய்வாளர் சைரஸ், உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வி மற்றும் போலீஸார் வேம்பார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வேம்பார் தோமையார் தேவாலயம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சூரங்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் போலீஸார் அந்த வழியாகச் சந்தேகப்படும்படியாக வந்த கார் மற்றும் வேனை நிறுத்தினர். போலீஸாரைப் பார்த்ததும் கார் மற்றும் வேன்களில் வந்த நபர்கள் தப்பி ஓடினர். போலீஸார் அவர்களை விரட்டிச்சென்றனர். இதில், ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரைச் சேர்ந்த காஜாமைதீன் மகன் ஆவுல்மைதீன் (42) என்பவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

போலீஸார் வேனைச் சோதனையிட்டதில் 48 சாக்கு மூட்டைகளில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். விசாரணையில், இந்தக் கடல் அட்டைகளைப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்துக் கடல் அட்டைகள், கடத்தப் பயன்படுத்திய கார், வேன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், ஆவுல்மைதீனைக் கைது செய்தனர்.

மேலும், தப்பி ஓடிய தூத்துக்குடியைச் சேர்ந்த வேலு, முருகன், அமீர், அசார், வேம்பாரைச் சேர்ந்த ராஜா ஆகிய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in