மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் 400 குறு, சிறு பவுண்டரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஒரு பவுண்டரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகள். | படம்: ஜெ.மனோகரன்.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஒரு பவுண்டரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகள். | படம்: ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

மூலப்பொருட்களின் விலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கட்டுப்படுத்தக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு பவுண்டரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளன.

இந்தப் போராட்டத்தை ஆதரித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) சார்பில் 4,000க்கும் மேற்பட்ட குறுந்தொழில்முனைவோர் இன்று (டிச.16) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது:

"400 குறு, சிறு பவுண்டரிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 2 லட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வார்ப்படத் தொழிலுக்கு மூலப் பொருட்களான பிக் அயர்ன், ஸ்கிராப், கோக் மற்றும் சார்பு பொருட்கள் குறுகிய காலத்தில் 26 சதவீதத்துக்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளதால், பவுண்டரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எந்த அடிப்படையில் இந்த விலை உயர்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மூலப்பொருட்களைத் தயாரிக்க எந்தெந்தப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இல்லை. ஆனால், இறுதியாக வெளியாகும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

எனவே, விலை உயர்வைக் கண்காணிக்க ஒரு குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும். அதில், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும்.

கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்".

இவ்வாறு சிவசண்முககுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in