

சென்னை டாஸ்மாக் மேலாளரும், வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியின் கணவருமான முருகன் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வேலூரில் உள்ள அவரது வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2 மாதங்களாக பல்வேறு சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதில், அரசு அலுவலகங்கள், பெரிய பதவிகளில் உள்ள அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம், வெள்ளி மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை வேளச்சேரி, அயனாவரம், எழும்பூர், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் 'எலைட்' கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குப் புகார் சென்றது.
அதன் பேரில், வேளச்சேரியில் உள்ள பீனீக்ஸ் மால், அல்சா மால், ஸ்கைவாக் உள்ளிட்ட மால்களிலும், அயனாவரம் பகுதியில் உள்ள எலைட் கடைகளிலும் சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்றிரவு (டிச.15) 10 மணி முதல் இன்று (டிச.16) அதிகாலை வரை சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டாஸ்மாக் 'எலைட்' கடைகளில் மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் சென்னை டாஸ்மாக் மேலாளரும், வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியின் கணவருமான முருகனுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததால் முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முருகனின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். அதன்பேரில், வேலூர் தொரப்பாடி - பாகாயம் சாலை, ஆப்கா சிறைத்துறை வளாகத்தில் உள்ள டிஐஜி ஜெயபாரதியின் வீட்டுக்கு வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று மதியம் வந்தனர்.
வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் 5க்கும் மேற்பட்ட காவலர்கள் ஜெயபாரதியின் வீட்டில் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, "சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு அளித்த உத்தரவின் பேரில், சிறைத்துறை டிஐஜியின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக்கும் வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவரது கணவர் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இவ்வளவுதான் கூற முடியும், பணம், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன" என்றனர்.
வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பல மணி நேரம் சோதனை நடத்தி வரும் சம்பவம் சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.