

வத்தலகுண்டு அருகே கண்மாய்க்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள், பெண்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எம்.குரும்பப்பட்டியில் கன்னிமார் சமுத்திரம் கண்மாய் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கண்மாய்க்குத் தண்ணீர் வரவில்லை. வறண்டு கிடக்கும் கண்மாயால் இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது வடகிழக்குப் பருவ மழையால் மருதா நதி அணை நிரம்பிய நிலையில், கண்மாய்களுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டு நிரப்பப்படுகிறது.
இதற்கிடையே பாசனக் கண்மாய்கள் பெருமளவில் நிரம்பிவிட்ட நிலையில், கடைசியாக உள்ள கன்னிமார் சமுத்திரம் கண்மாய்க்குத் தண்ணீர் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தண்ணீர் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பாசன விவசாயிகள், குரும்பப்பட்டி கிராமத்துப் பெண்கள் ஆகியோர் இன்று வறண்ட கண்மாய்க்குள் நின்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வத்தலகுண்டு- மதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர், நீதிபதி, டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு தினங்களில் கண்மாய்க்குத் தண்ணீர் வர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, மக்கள் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.