

மழை பொழிவிலும் புதுச்சேரியில் மார்கழி பஜனை உற்சவம் தொடங்கியது. சாரலில் நனைந்தபடி வீதிகளில் பஜனை பாடி சென்றனர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாதத்தில்தான் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்" என திருப்பாவை பாசுரங்கள் பாடி கோபியரை துயிலெழுப்பி பகவான் நாமத்தை கூறி அனைவரையும் பக்தி பரவசப்படுத்தினார்.
மாணிக்கவாசக பெருமானும், "போற்றியென் வாழ் முதலாகிய, பொருளே புலர்ந்தது. பூங்கழற்கு இணைதுணை மலர்க்கொண்டு ஏற்றி நின்..." என்று பாடி மார்கழி மாதத்தில் சிவ பக்தர்களை பரவசப்படுத்தினார்.
பின்னர் காலங்காலமாக மார்கழி மாதம் முழுவதும் பாகவத பெரியோர்களால் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் இறை பாடல்களை பாடி வீதி உற்சவம் நடத்தி வருகிறார்கள்.
மார்கழி பிறப்பான இன்று (டிச. 16) காலை பல இடங்களில் புதுச்சேரியில் வீதி பஜனைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
காலை வேளையில் ஓசோன் காற்றை சுவாசித்தவாறே பஜனைக்கு செல்ல பலரும் காத்திருக்கும் வேளையில் தொடர் மழை பொழிவு நிகழத்தொடங்கியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் காலை முதல் தொடர்ந்து மழை பொழிவு நீடித்தது.
புதுச்சேரி வேத பாரதி மூன்றாவது மார்கழி வீதி பஜனை உற்சவத்தை இன்று புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் தொடங்கியது.
இவ்வருட மார்கழி மாத முதல் தேதியான இன்று காலை புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன் (காங்கிரஸ்), பாஜக எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர் ஆகியோர் கூட்டாக விழாவை தொடக்கி வைத்தனர்.
பஜனை குழுவினர் பாடல்களை பாடி தங்கள் குழுவுடனும் பக்தர்களுடனும் மாடவீதி வலம் வந்து வேதபுரீஸ்வரர் கோயிலில் நிறைவு செய்தனர்.
வேதபாரதி புதுச்சேரி தலைவர் ரமேஷ் கூறுகையில், "வேதபாரதி மூன்று ஆண்டுகளாக இப்புனித பணியில் ஈடுபடுகிறது. மார்கழி மாதம் முப்பது நாளும் புதுச்சேரியிலுள்ள நகர, கிராம பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலையில் ஆரம்பித்து சுற்று வீதிகளில் அனைத்து மக்களுடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. மார்கழி மாதம் முப்பது நாளும் நடைபெறும் இந்த பஜனை உற்சவம் நாளை கிருஷ்ணாநகரிலும், 18-ம் தேதி முதலியார்பேட்டையிலும், 19-ல் வில்லியனூரிலும், வரும் 20-ல் ஜீவானந்தபுரத்திலும் என தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவித்தார்.