

திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல 9 மாதங்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்திற்குப் பின் திறக்கப்பட்ட மலைக்கோட்டைக்குச் செல்ல டிக்கெட் பெற, நேரடிப் பணப் பரிவர்த்தனையைத் தவிர்த்து கூகுள் பே, பேடிஎம் மூலம் இணையவழியில் பணபரிவர்த்தனை செய்து டிக்கெட் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் நகரில் தொல்லியல் கட்டுப்பாட்டின் கீழ் மலைக்கோட்டை சுற்றுலாத் தலமாக உள்ளது. கரோனா ஊரடங்கு தொடங்கிய முதல் மலைக்கோட்டைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கரோனா தளர்வு காரணமாகத் திண்டுக்கல் மலைக்கோட்டை 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் எனப் பலரும் ஆர்வமுடன் மலைக்கோட்டைக்குச் சென்றனர்.
எனினும் ஊரடங்குக்குப் பிறகு திறக்கப்பட்ட மலைக்கோட்டைக்குச் செல்ல தொல்லியல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுச் செல்லவேண்டும் என்ற நிலை மாறி, தற்போது க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து, கூகுள் பே, பேடிஎம் மூலம் மட்டுமே நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். இதனால் மலைக்கோட்டைக்கு செல்ல வந்த பலரும் தங்கள் அலைபேசியில் பணம் செலுத்தும் செயலிகள் இல்லாததால் டிக்கெட் பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.
அதெபோலப் பாதுகாப்புக் கருதி முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மலைக்கோட்டை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 25 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனையால் ரூ.20 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு ரூ.300 ஆக இருந்த கட்டணம் ரூ.250 ஆக மாற்றப்பட்டுள்ளது.
மலைக்கோட்டைக்குச் செல்பவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலையைச் சோதிக்கப்பட்டு, சானிடைசர் பயன்படுத்தி, முகக்கவசம் அணிந்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.