Published : 16 Dec 2020 02:14 PM
Last Updated : 16 Dec 2020 02:14 PM

ஐஐடி ஆசிரியர் தேர்வு; 49.5% இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்: துரைமுருகன்

ஐஐடி ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, ஐஐடி கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் இன்று (டிச.16) வெளியிட்ட அறிக்கை:

"ஐஐடி கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என்றும், 'ஐஐடி நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும்' என்றும் மத்தியக் கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரைக்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'இட ஒதுக்கீட்டுப் பிரிவில் வருவோர் அனைவருமே தகுதி இல்லாதவர்கள்' என்று 2014-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு முத்திரை குத்தி, நாட்டின் சமூக நீதிக் கட்டமைப்பையே சீர்குலைத்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்களுக்கு எல்லாம் தகுதி இல்லை என்ற ஒரு மனப்பான்மையில் ஒரு மத்திய அரசு செயல்படுவது, இந்த நாட்டின் 80 சதவீத மக்களை அவமதிப்பதாகும்!

'130 கோடி இந்தியர்கள்' என்று ஒவ்வொரு முறையும் பேசும் பிரதமர் 80 சதவீத இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்ற தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் 'ஆதிக்க' 'ஆணவ' சக்திகளுக்குத் தாராளமாக இடமளித்து, அதை அனுமதித்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தங்களைத் தவிர மீதியுள்ளவர்கள் யாருமே தகுதியில்லாதவர்கள் என்பது குதர்க்கவாதிகளின் பழமைவாதம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள், தங்களின் பங்களிப்பை உலகமே வியக்கும் வண்ணம் அளித்து வருகிறார்கள் என்பதை ஏனோ பாஜக மட்டும் உணர மறுப்பது வேதனைக்குரியது.

ஏற்கெனவே ஐஐடிகளிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாய இளைஞர்களுக்கு உள்ள 49.50 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தைக் கூட நிரப்பாத மத்திய பாஜக அரசு, தற்போது இருக்கின்ற இட ஒதுக்கீட்டு முறையையும் நீக்கிவிடத் துடிப்பது சமூக நீதியின் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்!

அதை நாட்டில் உள்ள 80 சதவீத மக்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

ஆகவே, ஐஐடி ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, ஐஐடி கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், உயர் தகுதிமிக்க கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தும் என்று உடனடியாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

'நான் ஓபிசி' என்று கூறிய பிரதமர், நாட்டின் சமூக நீதிக் கட்டமைப்பைக் குழப்பவாதிகளிடமிருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்".

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x