

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், எதிர்பாராததாகவும் உள்ளது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்யும் போக்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (டிச.15) ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், அங்கிருந்த 29 மீனவர்களைக் கைது செய்து, 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, காங்கேசன் துறைமுகம் அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு படகையும் பறிமுதல் செய்து, அதிலிருந்த 7 மீனவர்களையும் கைது செய்தனர்.
மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச.16) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்பாராததாகவும் உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 36 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிக் கருவிகளையும் பாதுகாப்பாக தாயகம் மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.