அரசு உதவிப் பொறியாளர்கள் ஊதியக் குறைப்பு விவகாரம்; முதல்வர் பழனிசாமி இழைத்த அநீதி: தினகரன் விமர்சனம்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு உதவிப் பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தைத் திருத்தியமைத்து அறிவிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச.16) வெளியிட்ட அறிக்கை:

"பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தபிறகும் அரசு உதவிப் பொறியாளர்களுக்கான ஊதியக் குறைப்பில் பழனிசாமி அரசு பிடிவாதம் காட்டுவது கொஞ்சமும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

அரசு எந்திரத்தின் பணிகளைத் தொடக்க நிலையில் தங்களின் தோள்களில் சுமந்து செயல்படும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்களுக்கு முதல்வராக மட்டுமின்றி, அந்தத் துறைகளின் அமைச்சராகவும் இருக்கிற பழனிசாமி நேரடியாக இழைத்திருக்கிற மிகப்பெரிய அநீதியாகும்.

உலகத்தில் வேறெங்கும் நிகழாத கொடுமையாக ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊதியத்தைக் குறைத்து ஹிட்லரைவிட மோசமானவராக முதல்வர் பழனிசாமி நடந்து கொண்டிருக்கிறார். அரசு உதவிப் பொறியாளர்களைத் தன் வழக்கமான பாணியில் நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்.

இவ்வளவு கோரிக்கைகள் எழுந்த பிறகாவது இதுகுறித்த தமது முடிவை பழனிசாமி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு உதவிப் பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தைத் திருத்தியமைத்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in