

கெலமங்கலத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு நடந்தது. பதற்றம் ஏற்பட்டதால் 4 மாவட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத் துள்ள கெலமங்கலத்தில் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையின்போது முஸ்லிம் அமைப்பினர் ஊர்வலம் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கெலமங்கலம் மசூதியில் தொடங்கிய ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் தேன்கனிக்கோட்டை - கெலமங்கலம் சாலை, சுல்தான்பேட்டை வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து முடிய வேண்டும்.
ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல முயன்றனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அப்போது, சிலர் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊர்வலத்தில் சென்றவர்களும் பதிலுக்கு கற்களை வீசியதாகத் தெரிகிறது.
இதைத் தடுக்க முயன்ற போலீஸார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து டிஎஸ்பி வெங்கடாசலம் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினர் மீதும் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
தொடர்ந்து எஸ்பிக்கள் கண்ணம்மாள் (கிருஷ்ணகிரி), லோகநாதன் (தருமபுரி) ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கெலமங்கலத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர் பாக இரு தரப்பும் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.