Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

சென்னையில் சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் இருந்து ரூ.7 கோடி சொத்து ஆவணங்கள், 3 கிலோ தங்கம், ரூ.1.37 கோடி பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

சென்னை சாலிகிராமத்தில் உள்ளசுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்பு போலீஸார் தெரிவித் துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள் என பல்வேறு முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். சுற்றுச்சூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருக்கும் பாண்டியன் என்பவரின் அலுவலகத்தை மையமாக வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய சோதனை நேற்று மதியம் வரை நீடித்தது.

பாண்டியனின் அலுவலக அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.88,500 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம்அவரது அலுவலக அறையிலும், வாகனத்திலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பாண்டியனின் வங்கிக் கணக்கில் ரூ.38.66 லட்சம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம், 3 கிலோ 81 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 22 லட்சம் ஆகும். ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 10.52 காரட் வைரங்களும், ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 3.343 கிலோ வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து பாண்டியனின் வீட்டில் இருந்த ஒரு கார்,3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தசொத்துகள் அனைத்தும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி சான்று கொடுப்பதற்காக வழங்கப்பட்ட லஞ்ச பணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் பாண்டியனை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x