

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்டதை சுங்கத் துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறிந்து, தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித்குமார், முன்னாள் அதிகாரியும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் விற்பனை மேலாளராகப் பணியாற்றியவருமான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவையைச் சேர்ந்த நகைப் பட்டறை உரிமையாளர் நந்தகோபாலுக்கு(42) இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் கேரளாவில் இருந்து கோவை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், நந்தகோபாலின் வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், அவரை கொச்சியில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து, விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, இவ்வழக்கில் அப்ரூவராக மாற நந்தகோபால் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்தாராம். அவரது வாக்குமூலத்தில், தன்னுடன் வியாபாரத் தொடர்பில் இருந்த, கோவை பெரியகடைவீதியைச் சேர்ந்த 3 நகை வியாபாரிகளின் பெயர்களை தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் கோவை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், நந்தகோபால் கூறிய மூன்று நகைப்பட்டறை உரிமையாளர்களை அழைத்து, ரேஸ்கோர்ஸில் உள்ள தற்காலிக என்.ஐ.ஏ. கிளை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதில், தங்கக்கட்டிகள் குறித்து பல்வேறு தகவல்களை மூவரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பின்னர், மூவரையும் அனுப்பிவிட்டனர்.
முன்னதாக, அவர்களது வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.