Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

கறவை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்: திருப்பூர் மாவட்ட கால்நடை விவசாயிகள் கவலை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை கால்நடைகள். இந்நிலையில், கறவை மாடுகளை பெரியம்மை நோய் தாக்கி வருவது கால்நடை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கூறும்போது, "மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளில் ‘லம்பி ஸ்கின் டிசீஸ்' எனும் பெரியம்மை நோய்வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை, கிராமப்புறங்களில் விவசாயத் துக்கு அடுத்ததாக பெரும்பாலான கிராமங்களில் கறவை மாடுகள், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைவளர்ப்பை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். நோய் பாதித்தகால்நடைகளுக்கு காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் ஏற்படுகி றது. மேலும், உருண்டையாக கட்டிகள் தோன்றி உடைந்து சீழ் வெளியேறுவதால் சோர்வடை கின்றன. உடல் உபாதையால் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால், பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கு மருந்தாக விவசாயி கள் மஞ்சள் தூள், வெற்றிலை, வேப்பெண்ணெய் கலந்து அரைத்து கட்டிகள் மீதும், காயங்க ளிலும் பூசி வருகின்றனர்.

மாட்டுக் கொட்டகைகளை புகை போட்டு, கொசு வராத வகையில் சுத்தம் செய்து வைத்துள்ளோம். கால்நடைகளுக்கு நோய் தாக்கு தலால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பாக, கால்நடைத் துறை சார்பில்கண்டுகொள்ளாமலும், கட்டுப் படுத்தும் வழி முறைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமலும் உள்ளனர். கறவை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

பொருளாதார நஷ்டம்

திமுக உயர்நிலை செயல்திட் டக் குழு உறுப்பினர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, "தாராபுரம்,காங்கயம், பல்லடம், திருப்பூர், அவிநாசி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாடு, ஆடுகளை நோய் தாக்குகிறது. அம்மை, கால் தொடைகளில் புண், உடம்பில் தடிப்பு, காய்ச்சல், தொண்டை கட்டுதல் உள்ளிட்ட நோய் ஏற்பட்டு மாடுகள் இறந்துவிடுகின்றன. இது விவசாயிகளையும், கால்நடைவளர்ப்போரையும் பொருளாதார நஷ்டத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதை கருத்தில்கொண்டு, கால்நடைத் துறை மூலமாக மேற்குறிப்பிட்ட நோய்த் தாக்குதல்களில் இருந்து கால்நடைகளை காக்கும் நடவடிக்கையில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும்" என்றார்.

கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பொன்.பாரிவேந்தன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "கால்நடைக்கு பரவும் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக, திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கால்நடை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். காய்ச்சல் அதிகம் இருந்தால், மாடுகள் தீவனம் எடுக்காது. இதனால் கறவை பாதிக்கும். மற்றபடி, உயிரிழப்பு எதுவும் ஏற்படாது. அதுகுறித்த அச்சம் தேவையில்லை. நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள், 3 நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். நோய் பாதித்த மாடுகளை தனியாக வைத்தால், மற்ற மாடுகளுக்கும் பரவாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x